கம்பர் இயற்றிய கம்பராமாயணம்
யுத்த காண்டம் – 1. கடல் காண் படலம்

Read English Translation – Bala Kandam 1 (Padalam 1)


கடவுள் வாழ்த்து

‘ஒன்றே’ என்னின், ஒன்றே ஆம்; ‘பல’ என்று உரைக்கின், பலவே ஆம்;
‘அன்றே’ என்னின், அன்றே ஆம்; ‘ஆமே’ என்று உரைக்கின், ஆமே ஆம்;
‘இன்றே’ என்னின், இன்றே ஆம்; ‘உளது’ என்று உரைக்கின், உளதே ஆம்;
நன்றே, நம்பி குடி வாழ்க்கை! நமக்கு இங்கு என்னோ பிழைப்பு? அம்மா!

சேனையோடு சென்று, இராமன் கடலைக் காணுதல்

ஊழி திரியும் காலத்தும் உலையா நிலைய உயர் கிரியும்,
வாழி வற்றா மறி கடலும், மண்ணும், வட பால் வான் தோய,
பாழித் தெற்கு உள்ளன கிரியும் நிலனும் தாழ, பரந்து எழுந்த
ஏழு-பத்தின் பெரு வெள்ளம் மகர வெள்ளத்து இறுத்ததால். 1

பொங்கிப் பரந்த பெருஞ் சேனை, புறத்தும் அகத்தும், புடை சுற்ற-
சங்கின் பொலிந்த தகையாளைப் பிரிந்த பின்பு, தமக்கு இனம் ஆம்
கொங்கின் பொலிந்த தாமரையின் குழுவும் துயில்வுற்று இதழ் குவிக்கும்
கங்குல் பொழுதும், துயிலாத கண்ணன் – கடலைக் கண்ணுற்றான். 2

திரைப் பரப்பில் குறுந் திவலையும் தென்றலும்

‘சேய காலம் பிரிந்து அகலத் திரிந்தான், மீண்டும் சேக்கையின்பால்,
மாயன், வந்தான்; கண்வளர்வான்’ என்று கருதி, வரும் தென்றல்
தூய மலர்போல் நுரைத் தொகையும் முத்தும் சிந்தி, புடை சுருட்டிப்
பாயல் உதறிப் படுப்பதே ஒத்த – திரையின் பரப்பு அம்மா. 3

வழிக்கும் கண்ணீர் அழுவத்து வஞ்சி அழுங்க, வந்து அடர்ந்த
பழிக்கும் காமன் பூங் கணைக்கும் பற்றா நின்றான் பொன் தோளை,
சுழிக்கும் கொல்லன் ஊது உலையில் துள்ளும் பொறியின் சுடும், அன்னோ-
கொழிக்கும் கடலின் நெடுந் திரைவாய்த் தென்றல் தூற்றும் குறுந் திவலை. 4

நென்னல் கண்ட திருமேனி இன்று பிறிது ஆய், நிலை தளர்வான்-
தன்னைக் கண்டும், இரங்காது தனியே கதறும் தடங் கடல்வாய்,
பின்னல் திரைமேல் தவழ்கின்ற பிள்ளைத் தென்றல், கள் உயிர்க்கும்
புன்னைக் குறும் பூ நறுஞ் சுண்ணம் பூசாது ஒரு கால் போகாதே. 5

கடற் கரையில் தோன்றிய பவளமும் முத்தும்

சிலை மேற்கொண்ட திரு நெடுந் தோட்கு உவமை மலையும் சிறிது ஏய்ப்ப,
நிலை மேற்கொண்டு மெலிகின்ற நெடியோன் தன்முன், படி ஏழும்
தலை மேல் கொண்ட கற்பினாள் மணி வாய் எள்ள, தனித் தோன்றி,
கொலை மேற்கொண்டு, ஆர் உயிர் குடிக்கும் கூற்றம் கொல்லோ-கொடிப் பவளம்? 6

‘தூரம் இல்லை, மயில் இருந்த சூழல்’ என்று மனம் செல்ல,
வீர வில்லின் நெடு மானம் வெல்ல, நாளும் மெலிவானுக்கு,-
ஈரம் இல்லா நிருதரோடு என்ன உறவு உண்டு உனக்கு?-ஏழை
மூரல் முறுவல் குறி காட்டி, முத்தே! உயிரை முடிப்பாயோ? 7

கடலின் தோற்றம்

‘இந்து அன்ன நுதல் பேதை இருந்தாள், நீங்கா இடர்; கொடியேன்
தந்த பாவை, தவப் பாவை, தனிமை தகவோ?’ எனத் தளர்ந்து,
சிந்துகின்ற நறுந் தரளக் கண்ணீர் ததும்பி, திரைத்து எழுந்து,
வந்து, வள்ளல் மலர்த் தாளின் வீழ்வது ஏய்க்கும் – மறி கடலே. 8

பள்ளி அரவின் பேர் உலகம் பசுங் கல் ஆக, பனிக் கற்றைத்
துள்ளி நறு மென் புனல் தெளிப்ப, தூ நீர்க் குழவி முறை சுழற்றி,
வெள்ளி வண்ண நுரைக் கலவை, வெதும்பும் அண்ணல் திருமேனிக்கு
அள்ளி அப்ப, திரைக் கரத்தால் அரைப்பது ஏய்க்கும் – அணி ஆழி. 9

கொங்கைக் குயிலைத் துயர் நீக்க, இமையோர்க்கு உற்ற குறை முற்ற,
வெங் கைச் சிலையன், தூணியினன், விடாத முனிவின் மேல் செல்லும்
கங்கைத் திரு நாடு உடையானைக் கண்டு, நெஞ்சம் களி கூர,
அம் கைத் திரள்கள் எடுத்து ஓடி, ஆர்த்தது ஒத்தது – அணி ஆழி. 10

மேலே செய்வன குறித்து இராமன் சிந்தித்தல்

இன்னது ஆய கருங் கடலை எய்தி, இதனுக்கு எழு மடங்கு
தன்னது ஆய நெடு மானம், துயரம், காதல், இவை தழைப்ப,
‘என்னது ஆகும், மேல் விளைவு?’ என்று இருந்தான், இராமன், இகல் இலங்கைப்
பின்னது ஆய காரியமும் நிகழ்ந்த பொருளும் பேசுவாம்: 11

மிகைப் பாடல்கள்

மூன்றரைக் கோடியின் உகத்து ஓர் மூர்த்தியாய்த்
தான் திகழ் தசமுகத்து அவுணன், சாலவும்
ஆன்ற தன் கருத்திடை, அயனோடே மயன்
தோன்றுற நினைதலும், அவரும் துன்னினார். 11-1

வந்திடும் அவர் முகம் நோக்கி, மன்னவன்,
‘செந் தழல் படு நகர் அனைத்தும் சீர் பெறத்
தந்திடும், கணத்திடை’ என்று சாற்றலும்,
புந்தி கொண்டு அவர்களும் புனைதல் மேயினார். 11- 2

Browse Temples in India